போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம்

தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 15/5/2017 முதல் வேலை நிறுத்தம் அறிவித்து அதனை நேற்றே ஆரம்பித்தும் விட்டார்கள். தி.மு.க., கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தை நடத்துகிறார்கள்.
 

அவர்கள் கோரிக்கையான 20 வருட பென்சன் பாக்கி போன்றவை மிக நியாயமானவை என்றாலும், பொது மக்களை அவதிக்குள்ளாக்கி, சாதாரண மக்கள் வேலைக்கு செல்வதையும், அரசு பேருந்தை நம்பி இருக்கும் நடுத்தர, ஏழை மக்களையும் கஷ்டப்படுத்தி வேலை நிறுத்தம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

 

அதே சமயம் தமிழக அரசு தொழிலாளர்களுக்கு தர வேண்டிய நியாயமான, ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட தொகை பல வருடங்களாக தராமல் இருப்பின் அதை உடனடியாக தர வேண்டும்.

 

இது இருக்க, கடந்த 7 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க வின் தயவில் ராஜ்ய சபா எம்.பி. சீட்டு வாங்கிய கம்யூனிஸ்ட் இத்தனை வருடங்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக இப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது / ஊக்குவிப்பது தவறான செயல்.

 

ராஜ்ய சபா எம்.பி. யும், கம்யூனிஸ்ட் [சி.பி.எம்] கட்சியின் மூத்த தலைவரும், நான் மிகவும் மதிக்கும், நேர்மையான, எளிமையான, அனைவருடனும் பழகும் திரு. டி.கே. ரங்கராஜன் அவர்களிடம் இது பற்றி கேட்டேன். அவரோ தனக்கு இதில் சம்பந்தமே இல்லை என்பது போல பேசுகிறார். அவர் கட்சி முன்னின்று நடத்தும் வேலை நிறுத்தம், இவரோ மூத்த தலைவர், இப்படி பேசுவது அழகல்ல.

 

மேலும் அவர் தி.மு.க. தொழிற்சங்கம் பெரியது. அவர்களை கேளுங்கள் என்று கூறுகிறார். இது நியாயமா? 

 

அதே போல தி.மு.க. 2011 வரை தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி. 2014 வரை மத்தியிலும் ஆட்சியில் ‘பங்கு வகித்த’ கட்சி. அடுத்து ஆட்சி அமைக்க போவதாக மார் தட்டிக் கொள்ளும் கட்சி. போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனையை 2011 வரையோ அல்லது 2014 முன்னதாகவோ தீர்க்கவில்லை. முடியவில்லையா? அல்லது மனமில்லையா? தெரியவில்லை. இவர்கள் என்னடா என்றால் போராட்டம் நடத்துகிறார்கள். இவர்கள் என்ன செய்தார்கள் என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோ!

 

இலவசம் கொடுக்க பணம் இருந்தது! விழா நடத்த பணம் இருந்தது! தங்களுக்கு தாங்களே சம்பளத்தை உயர்த்திக் கொள்ள பணம் இருந்தது! தொழிலாளர்களுக்கு கொடுக்க இல்லையாம்!!!!

 

இப்படிப்பட்டவர்கள் எல்லாம் என்னவோ பாலாறும் தேனாறும் நாட்டிளே ஓடச் செய்து விட்டது போல தங்களுக்கு தாங்களே விழா வேறு கொண்டாடுகிறார்கள்.

 

பொது மக்களும் ஊழியர்களும் புரிந்து கொள்வார்களா?

Leave a Reply

%d bloggers like this: