ராஜாஜி என்னும் மாமனிதர் – 1

1959-ல் ராஜாஜி அவர்கள் சுதந்திரக் கட்சியை திருவாளர்கள் என்.ஜி. ரங்கா மற்றும் மசானி அவர்களுடன் சேர்ந்து நிறுவினார். அப்போது எனக்கு வயது 13. முதலிலிருந்தே நான் அதன் ஆதரவாளன். காங்கிரஸை சுதந்திரத்துக்குப் பிறகு காந்திஜி கலைக்கச் சொன்னார். அதை கேட்கும் மனநிலையில் காங்கிரஸார் இல்லை. உண்மையாகத் தியாகம் செய்தவர்களைப் பின்னுறுத்தி, புதுசாகக் காங்கிரஸில் சேர்ந்தவர்களால் அது பீடிக்கப்படும் என்று அவர் பயந்தார். அவ்வாறே நடந்தது. ஆனால் உடனே இல்லை. அதை எதிர்த்து அதைத் தாமதப்படுத்தியவர்களில் ராஜாஜி முக்கியமானவர்.

போன வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமை கல்கி அலுவலகத்தில் இருந்தேன். 1952 ஜனவ்ரி முதல் 1954-ல் அவர் சென்னை மாகாணத்தின் முதல் மந்திரிப் பதவியை ராஜினாமா செய்தது வரையில் நடந்த விஷயங்களைப் பற்றி கல்கி அவர்களால் எழுதப்பட்ட தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகளை கூர்ந்து படித்தேன். என்னுடைய ஆறு வயதிலிருந்து எட்டு வயது வரையான இக்காலக் கட்டத்தில் வெறுமே கதைகள் மற்றும் துணுக்குகள் மட்டுமே அச்சமயம் படித்துள்ளேன். இவ்வளவு ஆண்டுகள் கழித்து அவற்றை மீண்டும் படிக்க நேர்ந்ததில் பழைய நண்பர்களைப் பார்ப்பது போல இருந்தது. அரசியல் கட்டுரைகளில் கண்டவையோ எனக்குப் புதியவை. இப்பதிவில் அவற்றைப் பற்றியே பேசுவேன்.

1952 தேர்தல் சென்னை மாகாணத்தைப் பொருத்தவரை காங்கிரஸுக்குத் தலைவலியாகவே முடிந்தது. மொத்தம் 375 இடங்களில் காங்கிரஸ் 152 இடத்தில் மற்றுமே வெற்றி பெற்றது. கம்யூனிஸ்டுகள் கணிசமான வெற்றி பெற்றனர். தனிப்பட்டப் பெரிய கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும் மந்திரி சபை அனைக்கும் நிலையில் அது இல்லை. சுமார் 200 பேர் ஆதரவாக இருந்தால் மட்டுமே மந்திரிசபை அமைக்க முடியும் என்பதுதான் உண்மை நிலை.

மாகாணத்தின் நிதிநிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. கடந்த 5 வருடங்களாக மழையில்லை. மிகுந்த மண்டைக் காய்ச்சலுக்குப் பின்னால் ராஜாஜி அவர்கள் உதவியைக் கோர முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவரோ கவர்னர் ஜெனெரலாக இருந்தவர். அவர் முதல் மந்திரி பதவிக்கு இறங்கி வர மாட்டார் என்றே பலர் நினைத்தனர். ராஜாஜி அவர்கள் ஒரு நாள் அவகாசம் கேட்டுப் பிறகு ஒத்துக் கொண்டார். கவர்னர் அவரை எம்.எல்.சி. ஆக நியமனம் செய்தார்.

அச்சமயத்தில் கல்கி எழுதியவை சுவையானவை. கல்கிக்கு ராஜாஜி மேல் இருந்த பக்தி எல்லோருக்கும் தெரிந்ததே. 30- 03 – 1952 கல்கி இதழில் அவர் ராஜாஜி அவர்கள் முதன் மந்திரி ஆவது நடவாத வெறும் பேச்சு என்றே எழுதினார். அவருக்கு ராஜாஜியின் உடல் நலத்தைப் பற்றி மிகவும் கவலை. இந்த நச்சுப் பிடித்த வேலையை ஏறுக் கொண்டு எங்கே தன் தலைவர் உடல் நலத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயம். ராஜாஜியிடம் அதே மாதிரி பக்தி வைத்துள்ள என் போன்றவருக்குப் புரியக் கூடிய கவலை அது. எவ்வளவு நல்லது செய்தாலும் காரியம் ஆனவுடன் ராஜாஜி கைகழுவிவிடப்படுவார் என்பதை அவர் உறுதியாக நம்பினார். அவ்வாறே நடந்தது. ஆனல் அவை பற்றிப் பிறகு. அடுத்த இதழிலேயே (6 – 4 – 1952) கல்கி எழுதினார்: “நடவாதது நடந்து விட்டது”. தான் கூறியமாதிரி நடக்காததைப் பற்றி பெரு மகிழ்ச்சியடைந்தார். அதுதான் கல்கி.

முதல் நாளிலேயே ராஜாஜி அவர்கள் தன் முழு சக்தியுடன் வேலையை ஆரம்பித்தார். இக்கிழவருக்குள் இவ்வளவு சக்தியா என்று அவர் எதிரிகளே மூக்கின் மேல் விரலை வைத்தனர். அது அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது வேறு விஷயம். என்.ஜி.ஓ.க்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியுடன் அவர் சேவை ஆரம்பித்தது. உணவு மற்றும் அதன் கட்டுப்பாடு, அதில் இருந்த லஞ்ச லாவண்யங்கள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்தார். பிறகு தைரியமாக உணவுக் கட்டுப்பாட்டை நீக்கினார். பிரளயமே வரும் என்னும் அளவில் அதிகாரிகள் பயம் காட்டினர். நேருஜி அவர்களே சிறிது மனக்கலக்கம் அடைந்தார். ஆனால் பின்னால் நடந்தவை ராஜாஜி அவர்கள் முடிவே சரி என்பதை நிரூபித்தன. சென்னை மாகாணத்தின் உதாரணத்தைப் பின்பற்றி மற்ற இடங்களிலும் கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது. கல்கியின் ஆனந்தத்தைப் பார்க்க அப்போதைய அவர் கட்டுரைகளை படிக்க வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் என்னுடைய இப்பதிவைப் படிக்கலாம்.

பதவிக்கு வந்து மூன்று மாதங்களில் தன் மந்திரிசபைக்கு ராஜாஜி அவர்கள் நம்பிக்கை வாக்கு கோரினார் ராஜாஜி. எதிர் கட்சி அங்கத்தினர்கள் மட்டும் முதலில் பேச அழைக்கப்பட்டனர். காங்கிரஸ் தரப்பில் சி. எஸ். அவர்கள் ராஜாஜி அவர்கள் மட்டும் பேசினர். ராஜாஜி ஒன்றரை மணி நேரம் பேசினார். எதிர்த்தரப்பு வாதங்களுக்கு ஆணித்தரமாக பதிலளித்தார். 200-க்கு 151 என்னும் அளவில் நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறியது.

இக்குழப்பங்களுக்கு நடுவில் ஆந்திரப் பிரிவினை பிரச்சினையும் சேர்ந்துக் கொண்டது. “மதறாஸ் மனதே” என்று ஆந்திர சகோதரர்கள் கோஷமிட்டனர். இதைப் பற்றி ஆராயப் புகுந்த நீதிபதி வான்சூ அவர்கள் சென்னையை இரு மாநிலங்களுக்கும் பொதுவானத் தலைநகராக வைக்கப் பரிந்துரை செய்தார். இது மட்டும் நடந்திருந்தால் மிகுந்தக் குழப்பம் நேர்ந்திருக்கும். ராஜாஜி அவர்கள் கடைசி வரை உறுதியாக இருந்தௌ சென்னையைத் தமிழ்நாட்டுக்குக் காப்பாற்றித் தந்தார். அப்போது ஆந்திரப் பகுதிகளில் எழுப்பிய கோஷம்: “ராஜாஜி சாவாலி, ஆந்திர ராஷ்ட்ரம் ராவாலி”. என்ன வேண்டுமானாலும் கத்திக் கொள் ஆனால் சென்னை கிடையாது என்று அவர் இருந்த உறுதியால் நேரு மற்றும் மற்ற மத்தியத் தலைவர்கள் சென்னை தமிழ் நாட்டுக்கே என்று முடிவு செய்து அதிகாரபூர்வ அறிக்கை விட்டனர். இவ்விஷயத்தில் ராஜாஜியின் பின்னால் எல்லா தமிழகக் கட்சியினரும் திரண்டு நின்றதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 05 – 04 – 1953 இதயில் கல்கி இதை “மதறாஸ் நமதே” என்று தலையங்கம் எழுதி வரவேற்றார்.

ராஜாஜி அவர்கள் பதவியேற்ற முதல் வருடத்தில் செய்த சாதனைகள்.

1. அரசியல் குழப்பத்தைத் தடுத்தார்
2. உணவுக் கட்டுப்பாடை எடுத்தார்
3. சென்னையைத் தமிழ்நாட்டுக்குக் காப்பாற்றிக் கொடுத்தார்.

இரண்டாம் வருடம் அவருக்கு கட்சியின் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு வர ஆரம்பித்தது. அவர் ஆட்சி செய்த போது கட்சிக்காரர்களை அரசு அலுவகத்துக்குள் விடவில்லை. பலரது வளமான வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சும்மா இருப்பார்களா அவர்கள்? இவற்றைப் பற்றி அடுத்தப் பதிவில்.

டோண்டு ராகவன்

taken from the blog of dondu raghavan

Leave a Reply

%d bloggers like this: